Monday, October 9, 2017

அத்தியாயம் 5: மனதினுள் வெடிமருந்து


நால்வரும் ஜெயபால் சார் கொடுத்த அந்த டைம் சர்ட்டை ஆளுக்கு முப்பது காப்பி ஜெராக்ஸ் எடுத்து அதை ஸ்பைரல் பைண்டிங் செய்தார்கள். சாமி அதன் முதல் பக்கத்தில், “எனது காலக் கண்ணாடி” என்று எழுதினான்.

தினமும் இரவு தூங்கும் முன்பாக இந்த பயிற்சியை செய்யவேண்டும் என்று முடிவு செய்தார்கள். மார்டின் தவிர அனைவருமே தொடர்ந்து எழுதினார்கள். மார்டினின் புது வேலை அவனுக்கு எழுதும் ஆர்வத்தை கொடுக்கவில்லை. இது ஒரு சாக்குதான் என்றாலும், புதிய வேலையின் பளு ஒரு வகையில் இதற்கு காரணம்.

ஒருவாரம் சென்றது. அஷ்வின், சாமி, இருவரும் ஒருவாரத்திற்கும் முழுமையாக இந்த பயிற்சியை செய்திருந்தார்கள். அர்ஜுன் கடைசி இரண்டு நாட்கள் செய்யவில்லை. மார்டின் முதல் இரண்டு நாட்கள் தவிர மற்ற நாட்கள் எதுவும் எழுதவில்லை.

ஞாயிறு வந்தது. ஜெயபாலும் அவர்களை சந்திக்க முழு ஆர்வமுடன் இருந்தார். முன்பே பேசி வைத்தது போல, காலை 6 மணிக்கு அனைவரும் ஆஜராகி போன வாரம் போல வாக்கிங் போனார்கள்.

திரும்பியதும் முதலில், “உங்கள்ள யாரெல்லாம் போன வாரம் முழுவதும் டைம் மேனேஜ்மென்ட் லாக் பயிற்சியை செய்தீர்கள்?” என்று ஜெயபால் கேட்டார்.

அஷ்வினும், சாமியும் லேசாக ஹாய் சொல்வதுபோல கையை அசைத்தார்கள்.

“ஏதாவது மாற்றம் தெரிகிறதா?”

அஷ்வின்: “நிறைய நேரம் கிடைக்குது சார். தேவை இல்லாத ஒரே ஒரு விஷயத்தை கட் பண்ணினேன் அதான்”

ஜெயபால்: “எதை கட் பண்ணினீங்க என்று தெரிஞ்சுக்கலாமா?”

அஷ்வின்: “லேட்டா தூங்குறது”

“சூப்பர் அஷ்வின். இது ஒரு முக்கியமான பழக்கம். நமக்கு சீக்கிரம் தூங்குற பழக்கம் அவசியம். இது சேல்ஸ் வேலையில இருக்குற பெரும்பாலானவர்களுக்கு தெரிவதில்லை. பொதுவாக மேன்ஷன்ல தங்கி இருக்குறவங்க லைப் இதுனாலேயே ஸ்பாயில் ஆகிருது. இதனோட முக்கியத்துவத்தை நீங்க உணரனும்” என்றார் ஜெயபால்.

சாமி தனது வேளையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைச் சொன்னான். “சார் நான் தினமும் ரிபோர்ட் அனுப்பனும். வாரம் ஒருமுறை சேத்துவச்சு அனுப்புவேன். அப்படி செய்யும்போது நிறைய குழப்பம் வந்து, மாத்தி மாத்தி அனுப்புவேன். சொல்லி சொல்லி என் பாஸ் வெறுத்தே போய்ட்டார். போன வாரம் டெய்லி ரிபோர்ட் அனுப்பினத பார்த்து அவர் ரொம்பவே சந்தோஷமாய்ட்டார். என்னத் தவிர என் கலீக்ஸ் எல்லார்ட்டயும் இதப்பத்தி சொல்லிருக்கார் சார்.”

“வெரி குட். இந்த வாரம் ரெண்டு விஷயம். நீங்க நாலு பேருமே, விடாம முதல் பயிற்சியை செய்யனும். தொடர்ந்து இரண்டு மாதங்கள் அவசியம். ரெண்டாவது விஷயம், உங்கள் டார்கெட் பற்றியது.”

“டார்கெட் என்ற வார்த்தை சேல்ஸ் ஜாப்க்கு மட்டும் கிடையாது. கூட்டில் இருந்து புறப்படும் பறவை முதல், செருப்பு தைக்கும் தொழிலாளி வரை, ஏன் உங்க அம்மாக்கு கூட டார்கெட் இருக்கிறது. அவங்க காலை சரியான டயத்துக்கு எந்திரிச்சு சரியான டயத்துக்குள்ள சாப்பாட்டை ரெடி பன்றாங்க இல்லையா?”

“சேல்ஸ் வேலைல இருக்றவங்கள்ள ரெண்டு டைப். ஒன்னு டார்கெட்ட பத்தி எல்லாம் யோசிக்காம, மத்தவங்க செய்றத கம்பேர் பண்ணி அவனைவிட, இவனைவிட என்று வாழ்க்கைய வேஸ்ட் பண்றவங்க. இவங்க எப்போதும் தன்னைவிட எத்தனைபேர் குறைவா பிஸ்னஸ் செஞ்சிருக்காங்க அப்டின்னு மட்டுமே பார்ப்பாங்க. இதுல உங்கள்ள யாராச்சும் இருந்தீங்கன்னா மாறிடுங்க. இல்ல, எங்கிட்ட வராதீங்க” என்று சற்று கடுமையா சொல்லிவிட்டு தொடர்ந்தார்.

“ஏன் சொல்றேன்னா, என் முதல் 5 வருஷம் இப்படித்தான் ஒண்ணுக்கும் லாயக்கு இல்லாம வேஸ்ட் ஆகிருச்சு. ரெண்டாவது ராகம் டார்கெட்ட மட்டும் குறிவச்சு வேலை செய்றவங்க. இவங்க வளர்ச்சி ரொம்ப ஸ்பீடா இருக்காது. சான்ஸ் இருந்தா இவங்களுக்கு ப்ரோமோஷன் கிடைக்கும். இல்லைன்னா, இவங்களவிட யார் அதிகம் பிஸ்னஸ் செய்றாங்கலோ, அவங்களுக்கு சான்ஸ் போயிரும் இல்லையா?”

“ஆமாம் சார். அஷ்வின் போன வருஷம் டார்கெட்டுக்கு மேல பதினான்கு பர்சன்ட் செஞ்சான் சார். ஆனா இவனுக்கு இன்கிரீமென்ட் மட்டும் கொடுத்துட்டு, மெட்ராஸ் பையன் ஒருவனுக்கு ஏரியா மேனஜர் ப்ரோமோஷன் கிடைச்சது. அவன் இவன விட வெறும் பன்னெண்டு பர்சன்ட்தான் கூட பிஸ்னஸ் செஞ்சான். என்னாடா அஷ்வின்?” என்று மார்டின் சொன்னான்.

“வெரி குட் எக்ஸாம்பில். இப்போ வெறும் பதினஞ்சு பர்சன்ட் டிப்பாரன்ஸ்ல அஷ்வினோட சேம் பொசிஷன்ல இருந்தவர் இப்போ மேனஜர். இவர் அந்த பொஷிஷனுக்கு போகுரத்துக்கு அடுத்த அப்பரைசல் வரை அதாவது அடுத்த சான்ஸ் வரை காத்து இருக்கணும். அடுத்து மேல வேக்கன்சி இல்லைன்னா பல வருஷம் காத்து இருக்கணும். என்ன அஷ்வின்?”

“யூ ஆர் கரெக்ட் சார்”

“ஸோ, அஷ்வினுக்கு முன்னாடி ப்ரோமோஷன் ஆனவர், இப்போ மட்டும் இல்ல, எப்போவுமே அவருக்கு சீனியரா இருப்பார். அடுத்த ப்ரோமொஷனுக்கு சீனியாரிட்டி பாக்கைல அவர் முன்னாடி இருப்பார் இல்லையா?”

“எஸ் சார்”.

“இதுக்கு ஒரே வழி, நீங்க டார்கெட்ட மதிக்கவே கூடாது. அதுக்கு பதிலா உங்க கனவை காதலிக்கணும். முக்கியமா, உங்க கனவு உங்க டார்கெட்டுக்கு ரொம்ப தூரத்துல, அதைவிட அதிகமா இருக்கணும்”
“சூப்பர் சார்” என்றான் அர்ஜுன்.

“டார்கெட் என்கிறது அடுத்தவன் உங்களுக்கு கொடுக்கிறது. இது லேபர் மைன்ட் உள்ளவங்களுக்கு பொருந்தும். அம்பிஷன் என்பது கனவு. இது உங்களுக்கு நீங்க கொடுத்துக்கிறது. இதுதான் லீடர் மைன்ட்.”

“இன்னும் ஒருவாரம் டைம் எடுத்துக்குங்க. உங்களோட அம்பிஷன் என்னங்கிறத முடிவு பண்ணுங்க. அடுத்த வாரம் சந்திக்கும் போது நீங்க எல்லோரும் மனதளவுல லீடர் ஆகி இருக்கணும். முதல்ல மனசுல என்னவா நீங்க ஆகுறீங்களோ, அதுவாத்தான் நிஜத்துலயும் ஆவீங்க”.

“நான் ரொம்ப ஸ்லோவா போற மாதிரி தெரியும். ஆனா, ஒரு நல்ல, நிரந்தர மாற்றத்தை கொண்டு வரணும்னா அதுக்குண்டான டயத்த செலவழிக்க தயாரா இருக்கானும்” என்று தனது இந்த வார மெசேஜ்ஐ தெளிவா சொன்னார்.

“சார். என்னால நீங்க கொடுத்த முதல் பயிற்சியை செய்ய முடியல. மன்னிச்சுருங்க. நெக்ஸ்ட் டைம் நோ எக்ஸ்கியூஸ்” என்று மார்டின் சொல்ல அர்ஜுனும் ஆமோதித்தான்.

வெளியே வந்ததும் நால்வரும் ஒரு டீக்கடைக்கு சென்றார்கள். நீண்ட நாட்களாக விட்டு இருந்த சிகரெட் ஒன்றை அஷ்வின் வாங்கினான்.

“என்னடா மச்சி?” என்று அர்ஜுன் கேட்டான்.

“ஜெயபால் சார் சொன்னதப் பத்தி நான் யோசிக்கவே இல்லடா. இனிமே எப்பவுமே அவன்தானே (ப்ரோமோஷன் வாங்கியவர்) சீனியர்? அவனுக்கு அப்பறம் தானே நான்? இன்னும் எவ்வளவு வருஷம் காத்து இருந்தா இந்த மாதிரி ஒரு சான்ஸ் வருமோ தெரியல. பேசாம ரிசைன் பண்ணிட்டு வேற கம்பெனில ஜாயின் பண்ணி புதுசா ஆரம்பிக்க வேண்டியதுதான்” என்று சொல்லிக்கொண்டே சிகரட்டை பற்ற வைத்தான் அஷ்வின்.

“டேய், இதப்போய் எண்டா நெகடிவா பாக்குற? புது கம்பெனில ஜாயின் பண்ணினா உடனே உனக்கு முதல் மரியாதையா குடுப்பாங்க? இங்க உனக்கு இருக்குற பெர்பார்மர் பெயர சும்மா விட்டுராதடா. அங்க போய் செய்றத விட உனக்கு தெரிஞ்ச இந்த கம்பெனில நல்லாவே செய்யலாம்” என்று பத்து செகன்ட் மார்டின் ஜெயபாலாகவே மாறினான்.

சிகரெட்டை தூக்கிப் போட்டுட்டு, “சரிடா மச்சி. எங்க தொலைச்சோமோ அங்க தான் தேடனும். போன வருஷம் விட்டத, இங்கயே, இந்த வருஷமே புடிச்சுக் காட்டுறேன். மேலயும் போய் கனவைத் தேடி அலையப் போறேண்டா” என்று அஷ்வின் சற்று உணர்ச்சிவசப்பட்டு சொன்னான்.

மற்றவர்களுக்கும் உள்ளுக்குள்ளே எதோ வெடிமருந்து திணித்தாமாதிரி இருந்தது.



No comments:

Post a Comment