Monday, October 9, 2017

அத்தியாயம் 4: முதல் விடியல்


நால்வரும் சேர்ந்து ஒரு ஞாயிறு அவரிடம் சென்று தங்களுக்கு எதிர்காலத்தைப் பற்றி வழிகாட்டுமாறு கேட்கலாம் என்று நினைத்தார்கள். அர்ஜுன் அவருக்கு இரண்டு நாட்களுக்கு முன் போன் செய்து தங்கள் ஆசையைப் பற்றி கூறினான்.

“நான் எதிர்பார்த்தேன். சீக்கிரமாகவே இந்த முடிக்கு வந்துருக்கீங்க. பாராட்டனும். சரி வர்ற ஞாயிறு நீங்க நாலுபேரும் என் ரூமுக்கு காலை 6 மணிக்கு வந்துருங்க.” என்றார்.

காலை 6 மணி என்றதும் அவர் எதோ ஒரு வித்தியாசமானவர் என்பதை உறுதிப்படுத்தியது. யாருமே 10 மணிக்கு மேல தான் வரச்சொல்லுவாங்க எவர் என்னாடா 6 மணிக்கே வரச்சொல்றார்? என்று ஒருவருக்கு ஒருவர் பாசிடிவாக பேசிக்கொள்ள துவங்கிவிட்டார்கள். நம்மளுக்கு ஒருவரை பிடித்து விட்டால், அவர் என்ன செய்தாலும் சூப்பர் போடுவது மனித இயல்பு.

காலை 6 மணிக்கு அனைவரும் ஆஜர். “சரி வாக்கிங் போலாமா?” என்று கேட்டுக்கொண்ட ஜெய் தனது ஷூவை மாட்டினார். அனைவரும் “ஓகே” சொல்லி புறப்பட்டார்கள். ஹோட்டல் வெளியே வந்து, ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் வரை நடந்து திரும்பினார்கள். வழியில் நிறைய பொது விஷயங்கள் பேசினார்கள்.

ஹோட்டலுக்கு திரும்பியதும் அவரவர் விருப்பப்படி டீ, காபி வரவழைக்கப்பட்டது. பின் ஜெய் ஆரம்பித்தார்.

“ஒவ்வொரு நாளும் முக்கியமானது. ஒரு நாளை நாம் வீணடித்தால், நமது வெற்றி ஒரு நாள் தள்ளிப் போகும். ஸோ, ஒரு நாளோட ஆரம்பம் ரொம்ப உற்சாகமா இருக்கணும். நாமும் உங்க வயசுல 7 மணி வரைக்கு தூங்கி, ஒரு டீ சாப்ட்டு, பேப்பர் படிச்சு, அப்டீன்னு ரொம்ப ஸ்லோவாத்தான் ஒவ்வொரு நாளையும் ஆரம்பிப்பேன். அப்புறம் ஒரு நாளோட ஆரம்பத்தின் இம்பார்டன்ஸ் தெரிய ஆரம்பிச்சதும் ஏதாவது ஒரு ஆக்டிவ் துவக்கம் கொடுக்கணும்னு முடிவு பண்ணினேன்”.

“இப்ப பாருங்க ஒரு உற்சாகம் வந்துருக்கு. இப்படியே ஒரு நாள் பூராவும் இருக்க அதிகாலைத் துவக்கம் ரொம்ப அவசியம். இன்னிக்கு சண்டேங்கறதால 6 மணி. மற்ற நாள்ல 5.30 மணிக்கு வாக்கிங் போய்டுவேன்.” என்றார்.

ஒரு பிரிண்ட் ஆன A4 சைஸ் பேப்பரைக் கொடுத்து, “நேத்து எந்த டைம்ல என்ன பண்ணினீங்க என்று எழுதுங்க” என்றார். அந்த ஷீட்ல காலை 5 மணி என்று தொடங்கி, ஒவ்வொரு மணி நேரத்துக்கும் இடம் இருந்தது. இரவு 10 மணிவரை எழுதும்படி இருந்தது.
டைம்
என்ன செய்தீர்கள்?
எந்த வகை
5 ~ 6 am



இப்படி இருந்தது. அதை எழுத தொடங்கிய உடனே, அர்ஜுன் “எந்த வகை” அப்டின்னு இருக்கே சார் அதுல என்ன எழுதணும்? என்றான்.

"டோன்ட் ஒர்ரி அபௌட் தட். பார்ஸ்ட் என்ன செய்தீங்கன்னு எழுதுங்க" என்றார்.

பத்து நிமிடங்களில் அதை எழுதி முடித்தார்கள். அதற்கு அப்புறம் ஜெய் ஒரு எழுதும் பேட் எடுத்து அதில் நான்கு சதுரங்களை வரைந்தார்.










அவற்றை இந்த படத்தில் உள்ளதுபோல எழுதினர். பின்னர், “இந்த நான்கும் நான்குவகையான வேலைகள். நமது வாழ்வில் நாம் செய்யும் அனைத்து செயல்களையும் இந்த நான்கில் ஏதாவது ஒன்றில் குறிப்பிடமுடியும். இவற்றில் எந்த வகையான காரியங்களை நீங்கள் அதிகம் செய்ய விரும்புகிறீர்கள்” என்றார்.

அர்ஜுன் “ABC” என்றான்.

சாமி “AC” என்றான்.

மார்டின் “A” என்றான்.

அஷ்வின் ஒன்றும் பேசாமல் தீவிரமாக யோசித்துக் கொண்டு இருந்தான்.

“என்ன அஷ்வின், உங்களுக்கு ஒன்றும் தோனலையா?” என்றார்.

“நம் வாழ்வில் எதையும் ஒதுக்க முடியாதே சார்? சில நேரங்களில் அவசரமில்லை அவசியமில்லை என்றாலும் பிறருக்காக நாம் அப்படியான காரியங்களை செய்வது அவசியமாகிறதே சார் அதுதான் ஒரே குழப்பமாக இருக்கிறது. நான் “ABCD” நான்கையும் செய்யவேண்டும் என்று நினைக்கிறேன்” என்றான் அஷ்வின்.

“அஷ்வின் சொல்வது சரிதான். சமூக விளங்காக இருக்கும் நம்மால் எதையும் ஒரேடியாக விளக்க முடியாது. ஆனால் நமது வெற்றி என்பது எவற்றை நாம் அதிகம் செய்கிறோம் என்பதைப் பொறுத்து அமையும்.”

“அனைவருமே A என்ற கட்டத்தை தேர்வு செய்தீர்கள். அது ஆபத்தான கட்டம். மக்களில் பெரும்பாலானவர்கள் அவசிய வேலைகளை முன்பே செய்யாமல் அதை அவசரம் மற்றும் அவசியமாக மாற்றி செய்கிறார்கள் என்பதுதான் உண்மை. உதாரணத்திற்கு உங்கள் மாதத் தவணைக்கான தேதி தெரியும். அதை 5 நாட்களுக்கு முன்பு தயார் செய்து வங்கியில் செலுத்தினால் அது அவசியம் ஆனால் அவசரமில்லை என்ற கட்டத்தில் இருக்கும். மாறாக கடைசி நாள் நீங்கள் பணத்தை கட்ட முற்பட்டால், அதனால் உங்களுக்கு வேண்டாத டென்ஷன் உண்டாகும். இந்த டென்ஷன் உங்களது மற்ற வேலைகளையும் பாதிக்கும்.”

“நமது முதல் பாடம், நீங்கள் அனுப்ப வேண்டிய ரிப்போர்டாக இருந்தாலும் சரி, ஈமெயிலாக இருந்தாலும் சரி, பில்லாக இருந்தாலும் சரி. அவற்றை அவசரமாக மாற்றாமல் முன்னரே செய்து பாருங்கள். ஒரு நாள் என்பது உங்களுக்கு மிக அற்புதமாக இருக்கும். தரமான வேலைகள் செய்ய நிறைய நேரம் கிடைக்கும்”

“ஸோ, நீங்கள் ஒவ்வொரு செயலையும் C என்ற இடத்திலேயே முடிக்கப் பாருங்கள். பெரும்பாலும் சேல்ஸ் வேளையில் உள்ளவர்கள் எல்லாவற்றையும் A என்ற நிலைக்கு வந்த பின்னரே தொடுவார்கள். கேட்டால், சேல்ஸ் வேலையே டென்ஷன் வேலையப்பா என்று அலுத்துக் கொள்வார்கள்.”

“இப்பொழுது நீங்கள் பூர்த்தி செய்த பேப்பரில் கடைசியில் இருக்கும் “எந்த வகை” என்ற இடத்தில், ஒவ்வொரு மணிக்கு நேராக அந்த வேலை ABCDயில் எந்த வகை என்று எழுதுங்கள். இதை தினமும் ஒரு மாதத்திற்கு எழுதி வாருங்கள், மேஜிக் நிகழும்” என்று நிறுத்தினார்.

நால்வரும் எதோ ஒரு புதிய செய்தி கிடைத்ததை உணர்ந்தார்கள். ஹோட்டலுக்கு வெளியே வந்து,

“ஆமாண்டா மச்சி. இவர் சொல்றமாதிரி பாத்தா, நம்மளோட நிறைய நேரம் டென்ஷன்லேயே போயிருதுடா. அப்புறம் நார்மல் மூடுக்கு வர ஒரு மணி நேரம் செலவாகிருது. இதுல கேட்ட பேரு வேற.” என்றான் சாமி.

“இவர் கிட்ட எதோ ஒரு மாற்றுப் பார்வை இருக்குடா” என்று முதல் முறையாக அஷ்வின் சர்டிபிகேட் கொடுத்தான்.


மணி காலை 1௦, நேராக டிபன் முடித்து விட்டு, ஒருவார அழுக்குத் துணிகளை துவைக்கப் போனார்கள். லேசாக மனமும் வெளுத்துக்கொண்டு இருந்தது.




No comments:

Post a Comment