Monday, October 9, 2017

அத்தியாயம் 2: புரோட்டா, சினிமா, விபத்து..



ரவு 8:30 மணி, மாலை 5 மணிவரை ஓய்ந்து இருந்த நகரம் புத்துயிர் பெற்ற பூரிப்பில் இருந்தது. பேசி வைத்தது போல, நால்வரும் சரியாக பாண்டியன் மெஸ்ஸில் ஆஜர் ஆகி இருந்தார்கள். புரோட்டாக்கள் ஆர்டர் பறந்தது. மதுரை இரவு உணவகங்கள் உங்கள் விரலை சுவைக்க வைத்துவிடும்.

பத்து மணிக்கு துவங்கும் படத்துக்கு அரை மணி முன்னதாகவே வந்துவிட்டார்கள். மாப்பிள்ளை விநாயகர் அண்ட் மாணிக்க விநாயகர் தியேட்டர். ஆங்கிலப் படங்களை குத்தகைக்கு எடுக்கும் திரையரங்கம். படம் துவங்குவதற்கு முன்னாலும், இடைவேளைகளிலும் இவர்கள் ஒலிக்கச்செய்யும் ஆங்கிலப் பாடல்களே பட்டையைக் கிளப்பும். டீசன்டான படங்களை மட்டும் இங்கு திரையிடுவார்கள். 

அன்றைய வரவு டெர்மினேட்டர் – II, அர்னால்டுக்கு மதுரையிலும் ரசிகர்கள் இருந்தனர்.

படம் முடிந்து திரும்பும்போது, அஸ்வின் “ஹேய்.. இங்க பார்ரா.. எங்க கம்பெனி விளம்பரம்” என்று ஒரு பெரிய போர்டை காட்டினான். மும்பைப் பெண் ஒருத்தி, அஸ்வின் விற்கும் ஒரு பொருளை கையில் வைத்துக்கொண்டு காதுக்கும் காதுக்கும் சிரித்தபடி இருந்தாள். அதை பார்த்துக் கொண்டே வண்டியை ஓட்டியதால், லோடு ஏற்றிக்கொண்டு வந்த ஒரு ட்ராக்டர் பக்கத்தில் பைக் உரசி, அப்படியே மார்ட்டின் சரிந்தான்.

பைக்கின் பின் சக்கரத்தில் ட்ராக்டரின் பெரிய பின் சக்கரம் ஏறி இறங்கியது. “அம்மா” என்ற ஒரு பெரிய அலறலுடன், மார்டின் துடித்துக் கொண்டிருந்தான்.

“டேய்.. மச்சி.. எப்படியாச்சும் காப்பாத்துடா..” என்று சன்னமாக முனகிக்கொண்டே இருந்தான்.

அர்ஜுனுக்கு மார்டின் ஏற்கெனவே நண்பன். அஸ்வினும், சாமியும் அன்று காலைதான் அறிமுகமானார்கள்.

மார்டின் இடது கால், பைக்கில் நன்றாக மாட்டிக்கொண்டு விட்டது. அவர்கள் பைக்கில் இருந்து மார்டினை விடுவிக்க முயற்சி செய்த போது வழியால் மார்டின் மேலும் அலறினான். பத்து பதினைந்துபேர் கூடிவிட்டார்கள். ட்ராக்டர் ஒட்டிவந்தவன் ஆளைக் காணோம்.
ஒரு வழியாக மார்டினை விடுவித்து, ஒரு ஆட்டோவை நிறுத்தி அவனை தூக்கிக்கொண்டு ஓடினார்கள். தொட்ட இடமெல்லாம் ரத்தம். பை பாஸ் ரோட்டில் இருந்த ஒரு மருத்துவமனையில் நர்ஸ் மட்டும் இருவர் இருந்தார்கள்.

“டாக்டர் இப்ப வரமாட்டார். நாளைக்கு காலைலதான் வருவார். நீங்க எதுக்கும் ஜி.ஹெச்சுக்கு தூக்கிட்டு போங்க” என்று அட்வைசித்தாள்.
அர்ஜுனுக்கு பொத்துக்கொண்டு வந்தது.

ஒருவழியாக தேனீ ரோட்டில் இருந்த ஒரு ஹாஸ்பிட்டலில் முதலுதவி கொடுத்தார்கள். அவர்களே, ஒரு ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து மதுரையில் உள்ள ஒரு பெரிய ஹாஸ்பிடலுக்கு அனுப்பி வைத்தார்கள். உள்ளே நுழைந்ததுமே, போலீஸ் விவரங்களைக் கேட்டு குறித்துக் கொண்டதும், மூவருக்குமே பக் பக் என்று அடித்துக்கொண்டது.

அஸ்வின், சாமி, அர்ஜுன் மூவரும் மார்டின் கூடவே இருந்தார்கள். அவரவர் இருப்பில் இருந்த பணத்தை எல்லாம் எடுத்து உடனடித் தேவைக்கு பணம் செலுத்தினார்கள். ஆனால் ஒன்றும் பேசிக்கொள்ளவே இல்லை. யார் செய்த தப்பு இது? அஸ்வின் மட்டும், தன்னைத் தானே நொந்து கொண்டான். அவனுக்கு அடிவயிற்றில் கொஞ்சம் கலக்கவும் செய்தது.

ICU-விற்குள் மார்டின். காலை 5:30 மணிக்கு ICU-வில் இருந்து “மார்டின் கூட வந்தவங்க யாருங்க” என்று ஒரு நர்ஸ் கூவினாள். விருட்டென்று மூவரும் அந்த நர்ஸ் அருகில் சென்றார்கள்.

“டாக்டர் கூப்பிடுறார். செருப்பை கழட்டிட்டு உள்ளே வாங்க” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றாள்.

சாமிக்கு மயக்கமே வந்துவிடும் போல இருந்தது. மூவரும் உள்ளே சென்றார்கள்.

“இவர் என்ன வேலை பாக்கறார்?” என்றார் டாக்டர்.

“நாங்க நாலுபேரும் சேல்ஸ்ல இருக்கோம் சார்”

“பிரெண்ட்ஸா?”

“ஆமாம் சார்”

“பயப்பட ஒன்னும் இல்ல. நல்ல வேளை நெர்வ்ஸ் டேமேஜ் ஆகல. ஆனா அதிகமா அடி பட்டு காயம் ஆகியிருக்கு. நார்மல் வார்டுக்கு மாத்திடுறேன். ஆனா, ஒன் மந்த் கம்ப்ளீட் ரெஸ்ட்ல இருக்கணும்” என்றார்.

அர்ஜுன் கிட்டத்தட்ட அழுதே விட்டான். “தேங்க்ஸ் டாக்டர். ரொம்ப தேங்க்ஸ்” என்று சொல்லி மார்ட்டினை தூரத்தில் இருந்தே பார்த்தார்கள். ஆழ்ந்த தூக்கத்தில் மார்டின் இருந்தான்.

ஆல் இஸ் வெல் என்பது போல, இந்த ஒரு விபத்து, இந்த நால்வருக்கும் ஒரு பெரிய திருப்பு முனையாக அமைந்தது.

நார்மல் வார்ட்.. “எங்க வீட்ல யாருக்காச்சும் சொன்னியாடா?” மார்டின் அர்ஜுனிடம் கேட்டான்.

“இல்ல மச்சி. சொல்ல வேணாம். கொஞ்சம் சரியாகட்டும்.”

“பணத்துக்கு என்னடா பண்றது?”

“நாங்க பாத்துக்குறோம் மச்சி” சாமி சொன்னான்.

“அதுல்லாம் வேணாம்டா. எங்க அப்பாட்ட சொல்லிரலாம்”.

“டேய். நாம நாலுபேரும்தான் சேர்ந்து போனோம். இதுல வர்ற எல்லாத்தையும் பங்கு போட்டுக்குவோம். மொதல்ல ஒன் பாஸுக்கு மட்டும் சொல்லி லீவு போடுடா” என்றான் அஸ்வின்.


இனி மாற்றம்..!



No comments:

Post a Comment