மார்டின் ஆஸ்பத்திரி வாசம் மற்ற மூவருக்கும் ஒரு பொறுப்புடன் கூடிய பொழுதுபோக்காக இருந்தது. மார்டின் அம்மா செல்போனில் தொடர்பு கொள்ளும்போதெல்லாம், ஏதாவது சாக்கு சொல்லிக்கொண்டே இருந்தான். “வேலை டைட்டாக இருக்குமா.. இந்த மாசம் டார்கெட் கொஞ்சம் அதிகமா இருக்கு”. இப்படி சில காரணங்கள்.
வாரம் ஒருமுறை அல்லது இரண்டு வாரத்துக்கு ஒரு முறையாவது மார்டின் வீட்டிற்கு செல்வது வழக்கம். முதன் முறையாக மூன்று வாரம் கழித்தும் அவன் வீட்டிற்கு செல்லவில்லை. செல்போன் இருந்ததால், ஒருவழியாக சமாளித்தான். மற்ற மூவரும் சேர்ந்து ஷிப்ட் முறையில் அவனுடன் இருந்தார்கள்.
சரியாக 25ம் நாள், மார்டினை செக்கப் செய்த டாக்டர் டிஸ்சார்ஜ் செய்யச்சொல்லி அனுப்பினார். அடி பட்டதில் இடது காலில் ஆழமான தழும்பு மற்றும் உடம்பில் சில இடங்களில் காயத்தின் அடையாளம். கால் மட்டும் சற்று விகாரமாக இருந்தது. கொஞ்ச நாளில் எல்லாம் சரியாகிவிடும் என்று தேற்றிக்கொண்டான்.
இந்த வாரமாவது வீட்டிற்க்குச் செல்லலாம் என்று நினைத்த மார்டினுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. ஒரு ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் விற்பனை மேலாளராக வேலை கிடைக்கும்போல இருந்தது.
இந்த ஆஸ்பத்திரி வாசத்தில் இவர்கள் நட்பு சற்று ஆழமானது. நால்வரும் ஒன்றாக முடிவெடுத்து ஒரு வீடு வாடகைக்கு எடுத்து தங்கலாம் என்று நினைத்தார்கள். மேன்ஷன் வாழ்க்கை சற்று இருக்கமாக இருந்தது. இவர்கள் மேன்ஷனில் தங்கி இருப்பது, மார்டின் வீட்டார் வந்து செல்லாததற்கும் ஒரு காரணமாகப் போய்விட்டது.
மதுரை டிவிஎஸ் நகர் அருகில் இருக்கும் அழகப்பன் நகரில் ஒரு வீடு அமைந்தது. வசதி குறைவாக இருந்தாலும், பேச்சுலர் வாழ்க்கைக்கு எந்த வீடும் ஒரு வசந்த மாளிகை. ஏனென்றால், பேச்சுலருக்கு அநேகமாக ஒருவரும் வீடு வாடகைக்கு தருவதில்லை.
ஆஸ்பத்திரி பிசியோதெரபி ஆலோசகர் சொன்ன பயிர்ச்சி எல்லாம் ஒழுங்காக செய்தான் மார்டின். ஒரு தனியார் நிறுவனத்தில் ஆயுள் காப்பீடு விற்பனை மேலாளராக மார்டினுக்கு வேலையும் கிடைத்தது. முன்பிருந்ததை விட வேலை அதிகம். சம்பளமும் தான்.
அர்ஜுனின் பிரெண்ட் ஒருவர் மதுரைக்கு வந்திருந்தார். அவர் ஒரு ஹோட்டலில் தங்கி இருந்தார். ஒரு மாதம் வேலை. ஒரு மாத காலமும் அந்த ஹோட்டலிலேயே தாங்கும் வசதி செய்யப்பட்டு இருந்தது.
இவர்தான் இவர்கள் நான்கு பேரின் வாழ்விலும் ஒரு மாற்றத்தை ஏற்பட அந்த இறைவன் அனுப்பிய தூதர். இப்படித்தான் நமது வாழ்வில் பலர் வந்து செல்கிறார்கள். நமக்கு அதன் Purpose எளிதில், விரைவில் விளங்குவதில்லை.
மார்டின் நன்றாக நடக்கத்தொடங்கி வேலைக்கும் செல்லத் தொடங்கிவிட்டன். ஒருநாள் மாலை அர்ஜுன் தனது பிரெண்டை வீட்டிற்கு அழைத்திருந்தான். அவர் பெயர் ஜெயபால். எல்லோரும் ஜெய் என்று கூப்பிடுவார்கள். நால்வரையும் விட மூத்தவர். அவர் ஒரு வணிக மேம்பாட்டு ஆலோசகர். மதுரையில் நட்டத்தில் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நிறுவனத்தை சீர்செய்யும் பெரும் பொறுப்புடன் அங்கு வந்துள்ளார்.
அன்றைய மாலைப்பொழுது இந்த நால்வருக்கும் ஒரு முக்கியத் தருணம். மாலை 7 மணிக்கு அர்ஜுன், ஜெய்யுடன் பைக்கில் வீட்டிற்கு வந்தான். மார்டின், அஸ்வின், சாமி மூவரும் இவருக்காக வேலையை முடித்துக்கொண்டு முன்பே வந்திருந்தார்கள். ஜெய் பெயருக்கு ஏற்றார்போல ஜெய்ஜாண்டிக்காக இருப்பவர். ஆறடி உயரம், உயரத்திற்கு ஏற்றார்போல உடல்வாகு. ஆனால் பேசத்தொடங்கி விட்டால், சுவாரசியமாக இருக்கும். சுறுசுறுப்பும் நிதானமும் கலந்த ஒரு பெர்பெக்ட் ஜென்டில்மேன்.
அவர் உள்ளே நுழைந்ததும், கேஷுவலாக தரையில் அமர்ந்துகொண்டார். மற்றவர்கள் பதறினார்கள். ஒரு சேர் மட்டும் இருந்தது. அதில் அமரச் சொன்னார்கள். ஜெய் மறுத்து எல்லாரும் ஒன்றாக இருக்கலாம் என்றார். அவர் முதலில் கேட்ட கேள்வி. இன்னும் 5 வருடங்களில் “நீங்கள் என்ன பொஷிஷனில் இருக்கப் போகிறீர்கள்?”. ஒருவருக்கும் தெளிவான பதில் இல்லை.
“நீங்க நாலு பேருமே சேல்ஸ் ஜாப்ல இருக்கீங்க. நாலு பேருமே வேற வேற நேச்சர் சேல்ஸ். சர்ப்ரைசிங் காம்பினேஷன். ஆனா ஒரு உண்மை தெரியுமா? செல்ஸ்ல இருக்கிறது ஒரு வேட்டை நாய் வேலை மாதிரி. விரட்டி விரட்டி வேட்டையாடச் சொல்வாங்க. நீங்க கொஞ்சம் ஸ்லோஆனா, உங்கள ஓரங்கட்டி விடுவாங்க. இது ஒரு தேன்க்லஸ் ஜாப்” என்றார்.
அவர் இப்படிச் சொன்னது ஒரு இறுக்கமான நினையை உண்டாக்கியது. என்றாலும், அவர்களுக்கே உரிய பாணியில், வேறு விஷயங்களில் பேச்சை போகவிட்டு அன்றைய டின்னரை ஒன்றாக முடித்துக்கொண்டார்கள். அர்ஜுன் மட்டும் டல்லாக இருந்தான். ஜெய்யை ஹோட்டலில் விட்டுவிட்டு வந்த அர்ஜுன், மற்ற மூவரிடமும் “சாரிடா மச்சி. அவர் இப்படி பேசுவாருன்னு எதிர் பார்க்கல. கொஞ்சம் ஓவராத்தான் பேசிட்டார். கடுப்பாய்ட்டேன். சாரி மச்சி” என்றான். மார்ட்டினும், அஸ்வினும் அமைதியாக இருந்தார்கள்.
சாமி மட்டும் “அவர் சொன்னதில் என்னடா தப்பு இருக்கு? அவரைப் பார்த்தா தலைக்கனம் புடிச்சவர் மாதிரியோ, தேவை இல்லாம அட்வைஸ் பன்ற மாதிரியோ தெரியல. எதோ ஒரு அக்கறைல சொன்ன மாதிரித் தான் இருந்தது” என்றான்.
அஸ்வின், “நீ மூடு. நமக்கு என்னாடா கொறைச்சல்? நல்லாத்தானே இருக்கோம்? சும்மா இப்படி ஏதாச்சும் சொல்லி வெறுப்பேத்துறது இவிங்க பொழப்பு. இதுக்கு அர்ஜுன் என்ன பண்ணுவான்?” என்றான். மேலும், “அவருக்கு சேல்ஸ்னா என்னான்னு தெரியுமாடா? நம்ம இல்லன்னா எல்லா கம்பெனியும் தயாரிச்சத அடுக்கி வச்சு பூஜதான் போடணும்” என்று பொரிந்து தள்ளினான்.
பொறுமையாக இருந்த அர்ஜுன், “டேய் அவரு நம்மள மாதிரி செல்ஸ்ல இருந்து படிப்படியா மேல வந்தவர்டா. அவர எனக்கு நல்லாத் தெரியும். மெட்ராஸ்ல எங்க மாமா வீட்டு எதிர்லதான் இருக்காரு. அவர் வீட்ல அவர் வாங்கின அவார்ட் வைக்க ஒரு தனி ஷோகேஸ் கூட இருக்கு” என்றான்.
இது அவர்களுக்கு கொஞ்சம் ஆச்சரியத்தைக் கொடுத்தது. அட நம்ம ஆளு என்று நினைத்து அவரைப்பற்றி இன்னும் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டார்கள். ஆனால் அஸ்வின் தனது நிலையில் இருந்து கொஞ்சம் கூட மாறவில்லை.
“என்னதான் இருந்தாலும் அவர் ஒரு புது ஆளுங்ககிட்ட இப்படி பேசி இருக்கக்கூடாது. எதோ அர்ஜுனுக்காக சும்மா இருந்தேன்” என்றான். அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே ஜெய் அர்ஜுனுக்கு போன் செய்தார்.
“சாரி கைஸ். நான் கொஞ்சம் அதிகமா பேசிட்டேன்னு நினைக்கிறேன். அர்ஜுன், ஒன் பிரெண்ட் எல்லார்டையும் சாரி சொல்லிடு.” என்று சொல்லி கட் செய்துவிட்டார்.
அதுவரை அமைதியாக இருந்த மார்ட்டின். “டேய் அவர் சொன்னதில தப்பு ஒன்னும் தெரியலடா. எனக்கு எதோ அந்த ஜீசஸ் ஒரு நல்ல வழிகாட்டிய அனுப்பி இருக்கார்ன்னு தோணுது. அவர் மாதிரி ஆளுங்ககிட்ட பழக நமக்கு எங்க சான்ஸ் இருக்கு? பிராங்கா பேசுறவங்கள நம்பலாம்டா” என்றான்.
நால்வரும் சற்று யோசிக்கத் தொடங்கினார்கள். அவர் கேட்ட முதல் கேள்வி மனதில் குடைந்துகொண்டே இருந்தது. முதல் நிலை சேல்ஸ்மேன். அப்புறம் சூப்பர்வைசர் மாதிரி முதல் நிலை (கடை நிலை) மேனேஜர். அப்புறம்? அதற்கு மேல உள்ள எல்லா பதவிகளையும் பல நிறுவனங்களில் IIM மாதிரி டாப் காலேஜ்ல MBA படிச்சவங்க புடிச்சுக்குவாங்க. இப்படியே, வாழ்க்கையை ஓட்டுறதுல என்ன சார்ம் இருக்கு என்று ஒருவருக்கொருவர் கேட்டுக்கொண்டார்கள். மணி 2, அகால வேலை.
அவர்களுக்கு ஒரு புதிய விடியல்.
அவர்களுக்கு ஒரு புதிய விடியல்.
No comments:
Post a Comment