ஞாயிறு மாலை ஏதாவது சினிமா போகலாமா என்று திட்டம் போட்டார்கள். அர்ஜுன் “அதுக்கு பதிலாக நாம வேற எங்கயாவது பொய், ஆற அமர யோசித்து நம்ம கனவு என்னன்னு டிசைட் பண்ணலாம் மச்சி” என்றான்.
மார்ட்டினும் அதை ஆமோதித்தான். மதுரை திருப்பரங்குன்றம் செல்லும் வழியில் உள்ள ஒரு டிரைவ் இன் ரெஸ்டாரென்ட் என்று முடிவு ஆனது. அவரவர் துவைப்பது, ரிப்போர்ட் எழுதுவது என்று சொந்த வேலையை பார்க்கச் சென்றார்கள்.
சாமியின் பாஸ் அடுத்த நாள் மதுரை விசிட் என்று மதியம் ஒரு மணிக்கு போன் செய்தார். “வெல்கம் சார்” என்றான் சாமி.
“நான் இன்னைக்கு ராத்திரி பதினோரு மணிக்கு மாட்டுத்தாவணி வந்துருவேன். நீ வந்து பிக்கப் பண்ணிக்கோ” என்று சாமியின் பாஸ் சொன்னார்.
“சார் பதினோரு மணிக்கா? நா வேணும்னா நீங்க ரெகுலரா தன்குற ஹோட்டல்ல ரூம் புக் பண்ணிர்றேன். நீங்க செக்இன் பண்ணிக்குங்க. நாளைக்கு காலைல ஒன்பது மணிக்கு உங்கள மீட் பண்றேன் சார்”
“நோ. நோ. இன்னிக்கு நான் உன்கூட தங்கலாம்னு இருக்கேன்.”
“சார் என்னோட என் பிரிண்ட்சும் தங்கி இருக்காங்க. உங்களுக்கு வசதிப்படாது”
“அதெல்லாம் நான் பாத்துக்கறேன். உன்கூட கொஞ்சம் டிஸ்கஸ் பண்ணனும்”
“பதினோரு மணிக்கு மேலயா? சரிவராது சார். நாளைக்கே மீட் பண்ணுவோம்”
அவர் விடுற மாதிரி இல்ல. சாமியோட முகம் கொஞ்சம் டல் ஆனதை அர்ஜுன் பாத்துட்டான்.
“என்ன மச்சி. யாரு அந்த ஸ்டுப்பிட் பாஸா?”
“ஆமான்டா. அவன் இன்னிக்கு ராத்திரி பதினோரு மணிக்கு என்ன மாட்டுத்தாவணியில பிக்கப் பண்ணச் சொல்றான். அது மட்டும் இல்ல இன்னிக்கு இங்க தங்கப்போரானாம். எவ்வளவு சொன்னாலும் கேக்க மாட்டேங்கிறான்டா”
“இதுல்லாம் ரொம்ப ஓவர். இங்க வந்து தங்குறதுக்கு அவனுக்கு என்ன ரைட்ஸ் இருக்கு” என்று பஞ்சாயத்தக் கூட்டினான்.
நால்வரும் கூடி இதுபற்றி பேசினார்கள். “அவன் வரட்டும் நான் பாத்துக்கறேன்” என்று மார்டின் சொன்னான். “இல்லைடா அவன் ஒரு மாதிரி” என்று சாமி மறுத்தான்.
அவர்கள் பேசிக்கொண்டே இருக்கும் பொது அர்ஜுனுக்கு ஜெயபால் போன் பண்ணினார். “என்னப்பா இன்னிக்கு என்ன ப்ளான்?” என்றார்.
“ஈவ்னிங் ஒரு ஹோட்டலுக்கு போய் ட்ரீம் பத்தி டிஸ்கஸ் பண்ணிட்டே டின்னர் சாப்டலாம் என்று ப்ளான் பண்ணி இருந்தோம் சார். ஆனா..” என்று அர்ஜுன் இழுத்தான்.
“ஆனா என்ன?”
“சாமியோட பாஸ் ஒரு டார்ச்சர் பேர்வழி. அவன் இன்னிக்கு பதினோரு மணிக்கு மதுரை வர்றானாம். அதுமட்டும் இல்ல. அவன் இங்கேயே எங்ககூட தங்கப்போரானாம். அதுபத்தித்தான் பேசிக்கிட்டு இருந்தோம்” என்றான்.
“வாட் நான்சன்ஸ்? சாமி தனியா தங்கலைன்னு அவனுக்கு தெரியுமா?”
“நல்லாத் தெரியும் சார். அவன் சாமிய பழயபடி மேன்சனுக்கு போகச்சொல்லி வேற டார்ச்சர் பண்றான்”
“நீ சாமிக்கிட்ட போனக் கொடு”
“சார் சாமி பேசுறேன் சார்”
“ஹாய் சாமி, அர்ஜுன் சொன்னான். இது என்னப்பா புதுசா இருக்கு? உங்க கம்பெனில ஹெச்.ஆர் பாலிசி, அலவன்ஸ் எல்லாம் கிடையாதா?”
“எல்லாம் இருக்கு சார். இவன் ஒரு சைக்கோ. எல்லாரையும் அடிமைமாதிரி நடத்துவான். அவனுக்கு ஒத்து ஊதலைன்னா செமையா போட்டுப் பாத்துருவான் சார்”
“மை காட். இந்த காலத்துல இப்படியும் ஒரு பைத்தியமா? நீ ஒன்னும் கவலைப் படாத. எனக்கு ரெண்டு மணிநேரம் டைம் கொடு. திரும்ப கூப்புடுறேன்”
இந்த ஒரு போன் கால், அவர்களது மூடை கலைத்தது. அஷ்வின் “அவன் நம்பரக் குருடா. என்னன்னு கேட்டுடறேன்? என்றான்.
“அதெல்லாம் வேணாம்டா. ஜெயபால் சார் ரெண்டுமணி நேரத்துல கூப்புடுறேன்னு சொன்னார். வெயிட் பண்ணுவோம்” என்றான் சாமி.
இப்படியும் சில சைக்கோ மனிதர்கள் சேல்ஸ் ஜாப்ல உண்டு. தன்னை ஒரு சர்வாதிகாரி மாதிரி நினைத்துக் கொண்டு கீழே வேலை பார்ப்பவர்களை உண்டு இல்லை என்று செய்துவிடுவார்கள். அவர்களுக்கு ஜால்ரா போடும் கூட்டத்திற்கு பொற்காலம்தான்.
பெரும்பாலும் இந்தமாதிரி மனிதர்கள், சுயநலவாதியாக, அடுத்தவர் உழைப்பை சுரண்டுபவர்களாக, மனிதாபிமானம் இல்லாதவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு காலம் பதில் சொல்லும் என்று விட்டுவிடக் கூடாது.
விற்பனைத் தொழிலில் நாம் சரியாக இருந்தால், இதுபோன்ற காமெடி கிறுக்கர்களுக்கு பயப்பட வேண்டியதில்லை. ஒருமுறை வளைந்து போகக் கற்றுக்கொண்டால், அப்புறம் வாழ்க்கை முழுதும் முதுகெலும்பு இல்லாமலேயே வாழ வேண்டியதுதான். சேல்ஸ் செய்பவர்களுக்கு மன உறுதி அவசியம். உங்கள் தன்மானத்துக்கு ஒரு பிரச்சனை என்றால் சாதரணமாக விட்டுவிடாதீர்கள். அதே சமயம் சற்று சமயோசிதம் அவசியம். வீண் சண்டை போட்டு உங்கள் எதிர்காலத்தை சூனியமாக்கிக் கொள்ளாதீர்கள்.
மதியம் நான்கு மணி. சாமியோட பாஸ் சாமிக்கு போன் செய்தார். “சாமி நான் இன்னிக்கு வரல. நாளைக்கு காலைல நம்ம டிஸ்ட்ரிபியூட்டர் ஆபீஸ்ல மீட் பண்ணுவோம்” என்று சொன்னார். அவரது குரலில் ஒரு கலவரம் இருந்ததை சாமி கவனிக்கத் தவறவில்லை.