அத்தியாயம் 1: மதுரை டு லண்டன்:
சாலையில் மிக ஒழுக்கமாக நின்று கொண்டிருந்த வாகனங்களும், அவ்வளவு
ட்ராபிக் நெரிசலிலும் ஒரு ஹாரன் சத்தம்கூட இல்லாமல் இருந்தது. இவன் பயணித்த டாக்ஸி
நம்ம ஊர் கருப்பு கலர் அம்பாசிடர் காரின் அண்ணன் போல இருந்தது. டிரைவர் ஒரு 70
வயது வெள்ளைக்காரர். பொறுமையாக ஓட்டினார்.
மெதுவாக நகர்ந்த அந்த காருக்குள்ளே பயண களைப்பில் அஸ்வின் லேசாக கண் அயர்ந்தான். சுளீர் என்ற வெயில், மூச்சை முட்டும் புகை மற்றும் தூசு, கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாடுவது போன்றே தினமும் ஓட்டும் பைக், வியர்வை இதெல்லாம் வேகமாக அவன் நினைவுக்கு வந்து சென்றது.
களைப்பையும் மீறி விழித்துக் கொண்டான். எதோ இனம் புரியாத உற்சாகம் அவனுக்குள் தொற்றிக்கொண்டது. “அவனுங்கல்லாம் முதல்லேயே வந்துட்டானுங்க. நான் தான் கடைசி. இப்போ நைட் 9. ஒருவேளை தூங்கிருப்பான்களோ” என்று நினைத்து சாமி கொடுத்த நம்பருக்கு டயல் பண்ண சேல் போனை எடுத்தான்.
அர்ஜுன் ரெண்டு நாள் முன்னதாகவே லண்டன் வந்திருந்தான். மார்டின் மனைவியுடன் இந்த டிரிப்பை மனைவியுடன் ஒரு ஹனிமூனாகவே மாற்றிவிட்டன். மூன்று நாட்கள் முன்னதாகவே மார்டின் மனைவியுடன் வந்துவிட்டான். அஸ்வினுக்கு ஒரு கான்பரன்ஸ் இருந்ததால், கடைசியில் வந்து சேர்ந்தான்.
மூன்று ரிங்கிலேயே சாமி எடுத்து, “மச்சி வன்டியாடா?” என்றான்.
“ஏர்போர்ட்டுக்கு யாராச்சும் வந்துருக்கலாம்ல?”
“வா மச்சி. 7 மணிக்குத் தான் ப்ரீ ஆனேன். சாரி டா” என்றான் செல்லமாக.
“சரி இன்னும் 20 நிமிஷத்துல வந்துருவேன். ரூம் நம்பர்?”
“.....”
“ஒ.கே”
அழைப்பை துண்டித்துவிட்டு மீண்டும் பின்னோக்கிப் பயணித்தான். மதுரை பழங்காநத்தம் பேருந்து நிலையம். அப்போதுதான் மாட்டுத்தாவணியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் வந்து, இது கிட்டத்தட்ட கைவிடப்பட்ட நிலையில் இருந்தது.
சிக்னலில் இருந்து பஸ்ஸ்டாண்ட் போகும் வழியில் இருக்கும் ஒரு டீக்கடைதான் இவர்களின் மீட்டிங் பாய்ன்ட். தற்செயலாக நடந்த அவர்களது சந்திப்பு 10 வருடங்கள் கடந்தும், இன்று வரை நிலைத்து நிற்கிறது.
அன்று அஸ்வின் உபயோகப்பொருட்கள் விற்கும் நிறுவனத்தின் சேல்ஸ்ரெப். சாமி பிரபல கார் விற்கும் நிறுவனத்தில் சேல்ஸ் எக்ஸிக்யூடிவ். இவர்கள் இருவரும் ஒரே மேன்ஷனில் தங்கி இருந்ததினால் பழக்கம். அஸ்வின் சொந்தவூர் ராசிபுரம். சாமிக்கு சொந்தவூர் பரமக்குடி. இருவரும் அந்த அளவுக்கு க்ளோஸ் இல்லை என்றாலும், ஒன்றாக சேர்ந்துதான் டீ, டிபன் எல்லாம்.
ஆரம்பத்தில் ஒருவருக்கு ஒருவர் சுத்தமாக பிடித்துக்கொள்ளவில்லை. என்னவோ தெரியவில்லை சில நாட்களிலேயே மெலிதாய்ப் பூத்த நட்பு வளர்ந்தது.
சாமி பார்க்க சுமார் ரகம்தான். அஸ்வின் பார்க்க கொஞ்சம் ரிச்சாக இருப்பான். ஒருநாள் ஸ்ட்ரைக். முதல் நாளே சாமியும் அஸ்வினும் தேவையான பிரட் மற்றும் பழங்களை வாங்கி வைத்திருந்தார்கள். எப்படியும் சாயங்காலம் 5 மணிக்கு மேல் கடைகள் திறந்துவிடும் என்ற நம்பிக்கையில், மதியம் வரை தேவையான பொருட்கள் அவர்களிடம் இருந்தது.
அன்று மூடியும் மூடாமலும் சில கடைகள் இருந்தன. இவர்கள் செல்லும் டீக்கடையும் அப்படித்தான், ரெகுலர் கஸ்டமர்களுக்காக திறந்திருந்தது. அன்றுதான் இவர்கள் மார்டினையும் அர்ஜுனையும் சந்தித்தார்கள். மார்டின் மதுரைக்காரர். அதாவது மதுரைக்கு அருகில் உள்ள சாத்தூர். ஒருமணிநேர பயணம் என்றாலும், மதுரையில்தான் ஜாகை. தனியார் இன்சுரன்ஸ் கம்பெனியில் டைரக்ட் சேல்ஸ் கன்சல்டன்ட். அர்ஜுன் ஒரு டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ் நிறுவனத்தில் டூர் பேக்கேஜ் மற்றும் டைம் ஷேர் திட்டங்கள் விற்பவர். நேடிவ் திருச்சி.
அன்று டீக்கடை ப்ரீயாக இருந்தது. வேலையும் இல்லை. வெறிச்சோடிய தெருவைப் பார்த்துக்கொண்டே ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டு இருந்தார்கள். ஸ்ட்ரைக் பற்றியும், திருநகரில் நடந்த கலாட்டா பற்றியும் துவங்கிய பேச்சு சுவாரசியமாக போனது. அந்த பேச்சும் சந்திப்பும் இவர்களிடையே நட்பை ஏற்படுத்தியது.
“இன்னைக்கு நைட் ஏதாவது படத்துக்கு போலாமா பாஸ்?” என்று மார்டின் ஆரம்பித்தான்.
“போலாமே. என்ன படத்துக்கு போலாம்?” என்று சாமி கேட்டான்.
“வேணாம்டா மச்சி. டயர்டாகிடும். நாளைக்கு வேலைக்கு போக முடியாது” என்று அஸ்வின் சொன்னான்.
“இங்கிலீஷ் படம் தான் பாஸ். பன்னரன்டற மணிக்கு முடிஞ்சுரும்” என்று மார்டின் சொன்னான்.
“ஒ.கே. போலாம். பைபாஸ் ரோடு பாண்டியன் மெஸ்ல நைட் சாப்டுட்டு அப்டியே போலாம்ல?” என்று அர்ஜுன் ஐடியா கொடுத்தான்.
நான்கு பேரும் ஒப்புக்கொண்டார்கள்.
சேல்ஸ் தொழிலில் இப்படித்தாங்க எந்தவித தயக்கமும் இல்லாம நட்புகள் உருவாகும். சேல்ஸ்ல இருப்பவர்களுக்கு பிரண்ட்ஷிப் உண்டாக எந்த ஒரு பெரிய காரணமும் தேவை இல்லை. பொதுவாக சேல்ஸில் இருப்பவர்கள் ஒயின்ஷாப்லதான் சந்திப்பாங்க என்று நினைக்கிறார்கள். அங்கு போகாத சேல்ஸ் மக்களும் இருக்கிறார்கள். டீ என்பது அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு ஒரு ரீசார்ஜ் பன்ற ஒரு விஷயம்.
அதுசரி, இந்தப் பசங்களுக்கு லண்டனில் என்ன வேலை? நாலுபேருமா இந்த அளவுக்கு, அதுவும் பத்து வருஷத்துல என்று நீங்கள் நினைப்பது எனக்கு புரிகிறது.
அதுதாங்க இந்த கதையோட சுவாரசியமே.